தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் அண்மையில் மழையில் நனைந்து சேதமடைந்தன. மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனைக்காக கொண்டுச் சென்றனர்.
இதில், சில கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்து வைத்துள்ளது. கொள்முதல் செய்ய வேண்டிய விவசாயிகளின் நெல்லும், அந்தந்த கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திடீரென பெய்த மழையின் காரணமாக சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
குறிப்பாக அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டு, அனைத்தும் மழையில் சேதமடைந்தன. இது குறித்து, நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் தானாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் பொதுநல வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், அனிதா சுமந்த் அமர்வு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்ற வழக்கோடு சேர்த்து இந்த வழக்கையும் விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கில் மக்கள் சமூக பொறுப்புணர்வோடு நடக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்!