தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கியத் தலைவர்கள் தங்களின் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவருகின்றனர். வேட்புமனு தாக்கல்செய்யும்போது, சொத்து மதிப்பு, தங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட குற்ற வழக்குகளின் விவரங்களை வேட்பாளர்கள் குறிப்பிட வேண்டும்.
அந்தவகையில், போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொத்து, கடன் ஆகியவை பலமடங்கு அதிகரித்துள்ளது. அவர் தாக்கல்செய்த சொத்து விவரத்தில், அசையும் சொத்து ஐந்து ஆண்டுகளில் 843 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது. அசையும் சொத்து 2016ல் ரூபாய் 55 லட்சம் ஆக இருந்த நிலையில் 2021இல் ரூ.5.19 கோடியாக உயர்ந்துள்ளது.
அசையா சொத்து ஐந்தாண்டுகளில் 169 விழுக்காடு உயர்ந்துள்ளது. அசையா சொத்து 2016இல் ரூபாய் 98 லட்சமாக இருந்தது. அதுவே 2021இல் ரூ.2.64 கோடியாக உயர்வு கண்டுள்ளது. கடன் அளவும் 988 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஓ. பன்னீர்செல்வத்தின் கடன் 2016இல் ரூ.25 லட்சமாக இருந்த நிலையில், 2021இல் ரூ.2.72 கோடியாக அதிகரித்துள்ளது.