சென்னை: அதிமுகவின் இரட்டைத்தலைமைகளிடம் ஏற்பட்ட ஒற்றைத்தலைமை சர்ச்சைதான் கடந்த இரு மாதங்களிலும் தமிழ்நாட்டின் ஹாட்-டாபிக்காக வலம் வந்தது. கடந்த ஜூன் 16 அன்று ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்தான் ஒற்றைத்தலைமை குறித்த தீப்பொறி முதல்முறையாக கிளம்பியது.
பதிலுக்குப்பதில்: ராயப்பேட்டையில் அன்று கிளம்பிய தீப்பொறி, அதே தலைமை அலுவலகத்திற்கு வெளியே பெரிய கலவரம்வரை இட்டுச்சென்றது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையில் அதிமுக சார்பில் இரண்டு பொதுக்குழுக்கள் நடைபெற்றுவிட்டன.
இறுதியாக நடந்த ஜூலை 11 பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப்பொதுச்செயலாளராக தேர்வாகி, ஓ.பன்னீர்செல்வம், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், எம்.பி.,யுமான ஓ.பி. ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவாளர்களைக்கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என அனைத்துப் பதவிகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் தூக்கிவீசப்பட்டார். மேலும், அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.,யாக கருத வேண்டாம் என மக்களவை தலைவர் ஓம்.பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். ஓ.பன்னீர்செல்வம் தரப்போ, ஓ.பன்னீர்செல்வம்தான் தேர்தல் ஆணையத்தின்படி கட்சியின் பொருளாளரும், ஒருங்கிணைப்பாளரும் என்று கூறி வந்தது.
எது நிஜ அதிமுக?: இந்தப் பிரச்னை போய்கொண்டிருந்த மற்றொரு புறம், ராயப்பேட்டையில் ஏற்பட்ட கலவரத்தால் தலைமை அலுவலகத்திற்குச்சீல் வைக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான வழக்கின் தீர்ப்பில், தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பின் மூலம் 'நிஜ அதிமுக' எடப்பாடி பழனிசாமி தரப்பினர்தான் என்று ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. மேலும், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் இந்த வேளையில், அதன் கூட்டணி கட்சியான பாஜக யார் பக்கம் என்ற கேள்வி எழுந்தது.
மோடியின் வருகையும்...கிளம்பிய பூதமும்: தமிழ்நாட்டு பாஜக தலைவர்கள் ஆரம்பத்தில் இருந்தே, இது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை என்றும், இதில் பாஜக தலையிடாது என்றும் தெரிவித்துவந்தனர். இந்த நேரத்தில்தான் பிரதமரின் சென்னை வருகை அரசியல் தளத்தில் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியது. 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று (ஜூலை 28) சென்னை வந்தார்.
முன்னதாக, நேற்று மாலை 5 மணியளவில் சென்னை வந்தார். அவருக்கு அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச்செயலாளர் இறையன்பு, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பாஜகவினர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரவேற்ற ஈபிஎஸ் - வழியனுப்பிய ஓபிஎஸ்: அதனைத்தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுகளை முடித்துக்கொண்டு இன்று (ஜூலை 29) காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து குஜராத்திற்குப் புறப்பட்டார்,பிரதமர். இதற்காக, பிரதமர் மோடியை வழியனுப்பும் நிகழ்வில் பல்வேறு முக்கியப்பிரமுகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டு பாஜகவின் முக்கியத்தலைவர்கள் உள்ளிட்டோர் அவரை வழி அனுப்பி வைத்தனர்.
பிரதமர் சந்திப்பு - உச்சநீதிமன்ற தீர்ப்பு: அதற்கு முன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு 10 நிமிடங்கள், பிரதமர் உடன் சந்திக்க நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் பரவியது.
குறிப்பாக, சென்னை வந்த பிரதமரை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்துப்பேச உள்ளதாக முன்னரே கூறப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கலாம் எனவும்கூறப்பட்டது. ஆனால், நமக்கு இறுதியாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பிரதமரை வழியனுப்பும் நிகழ்வில் மட்டுமே,ஓ.பன்னீர்செல்வம் பிரதமரிடம் பேசியுள்ளார் என உறுதியாகியுள்ளது.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்த அதே வேளையில், அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கட்டும் என்றும்; இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரட்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பொதுக்குழு தொடர்பான வழக்குகளை 3 வாரங்களுக்குள் முடித்துவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் யார் பக்கம்: சசிகலா பொதுச்செயலாளராகியபோது கட்சியில் இருந்து தான் விலகியபோது, பிரதமர் மோடி கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக முன் ஒருமுறை ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்றது, அவரது மகன் ஓ.பி.ஆர் டெல்லி வட்டாரங்களிடம் நெருக்கமாக இருப்பது போன்றவை பிரதமரின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்குதான் என்பது போன்ற கருத்தை வலுசேர்த்தது.
அதுமட்டுமல்லாமல், ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்த முதல் பொதுக்குழுவுக்கு முந்தைய நாள் இரவு உயர் நீதிமன்றத்தில் விடிய விடிய விசாரணை நடைபெற்று, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரு உட்கட்சி பிரச்னைக்காக இரவு முழுவதும் நீதிமன்ற விசாரணை நடந்தது இதுவே முதல்முறை என அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் வந்தன. மேலும், நாடாளுமன்ற மழைக்காழ கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நெருங்குகிறதா கிளைமேக்ஸ்: இவையனைத்தும், பிரதமர் மோடியின் 'ஆசிபெற்றவர்' என்ற பிம்பத்தை ஓ.பன்னீர்செல்வத்துக்கு அளித்து வருகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்போ இதை முற்றிலும் மறுக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே பிரதமர் குறித்து பேசி வருகிறார் எனவும்; பிரதமர் ஓ.பன்னீர்செல்வத்தை குறித்து எதுவும் பேசவேயில்லை எனவும் கூறி வருகின்றனர்.
மேலும், முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் வழியனுப்பும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். மேலும், தமிழ்நாட்டு பாஜகவினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களே நெருக்கம் காட்டி வருகின்றனர். எனவே, எடப்பாடி பழனிசாமி தரப்பும் பிரதமரை நெருங்க தொடர்ந்து முயற்சித்து வருவது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
இன்னும் மூன்று வாரங்களுக்குள் பொதுக்குழு தொடர்பான அத்தனை வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரில் யாருக்கு பிரதமரின் ஆதரவு இருக்கப்போகிறது என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் நிலவும் முக்கியக்கேள்வியாகும்.
இதையும் படிங்க: 'உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள்': ஓபிஎஸ்-க்கு பிரமதர் மோடி அட்வைஸ்