மதுரை: சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான பென்ஷன் வழங்க உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.
அதில், 'பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான உரிமை குறித்து விளக்கியுள்ளது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தின்படி சாதிய வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பென்ஷன் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 13 ஆயிரத்து 200 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த இத்தொகை தற்போது 7,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2024 பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் இந்த பென்ஷன் தொகையும் வழங்கப்படாததால், பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதோடு சாதிய வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையும் நிலுவையில் உள்ளது. ஆகவே சாதிய வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டோருக்கு பென்ஷன் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்." என்று கருப்பையா கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு, "ஓய்வூதியம் என்பது தனிநபர் தொடர்பானது. ஆகவே, இதில் வழக்கு தொடர பாதிக்கப்பட்டவர்களே முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள் தனித்தனியாக விண்ணப்பம் செய்தால், அதை 8 வாரங்களுக்குள் பரிசீலித்து அரசு நடவடிக்கை வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.