திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணி நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், “கரோனா நோயாளிகளுக்கு இதர நோய்கள் இருப்பதால்தான் திருவொற்றியூரில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகிறோம்.
ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் கருத்தை அப்பா, அம்மா கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால்தான் அந்தக் குடும்பம் வலிமையாக இருக்கும். அதுபோலதான் அதிமுக நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டமும். அது காரசாரமாக இருந்ததா அல்லது தேன்போல் இருந்ததா என்பது எங்களுக்குத் தான் தெரியும்.
ராமன்-லட்சுமணன் போல எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சிறந்த புரிதலுடன், ஒற்றுமையாக உள்ளனர். எனவே, அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை.
அரசியல் அரிச்சுவடி தெரியாமல் உதயநிதி ஸ்டாலின் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். பொது வாழ்க்கையில் ஈடுபடுவோரை, உதயநிதி ஸ்டாலின் நாகரீகமற்ற முறையில் பேசக்கூடாது. அவருடைய தந்தை அவருக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து தலைமைச் செயலர் ஆலோசனை!