காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மாணவரணிச் செயலாளர் பூபதி தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளுக்கான பொதுக்கூட்டம் போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், எம்.எம்.ஏ. பழனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து பேசிய அவர், ‘தமிழ் சமுதாயம் தலை நிமிர்ந்து வாழ்ந்திட வழி செய்தவர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர். ஆனால் செம்மொழி மாநாடு நடத்தி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வீண் செய்தவர்கள் திமுகவினர். மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த அதிமுகவிற்குதான் தகுதி உண்டு’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழ்நாடு கல்வியில் முதலிடம் வகிக்து வருகிறது. ஒரே ஆண்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் அதிமுக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 16 லட்சம் உறுப்பினர்கள் இருந்தார்கள். அதன்பின் பொறுப்பேற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 29 ஆண்டுகள் பொதுச்செயலாளராக இருந்து ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்டுவந்தார்’ என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ‘கருணாநிதி உடல் நலம் நன்றாக இருந்தபோதும், சரியில்லாதபோதும் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவி கொடுக்க நினைக்கவில்லை. அவருக்கே ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லை. பிறகு எப்படி மக்கள் நம்புவார்கள். ஸ்டாலின் என்றுமே முதலமைச்சர் ஆக முடியாது. அவர் எதுக்கும் சரிபட்டு வரமாட்டார்’ என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: பத்ம பூஷண் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் யார்?