சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் இன்று (ஜூலை 28) தொடங்குகிறது. இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இதற்காக மோடி குஜராத்திலிருந்து தனி விமானம் மூலம் மாலை சென்னை வருகிறார். பொதுவாக, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் #GobackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாவது வழக்கம்.
குறிப்பாக, இந்திய அளவில் ட்ரெண்டாகி பெரும் பேசு பொருளாகும். ஏன், கடந்த மே 26ஆம் தேதி பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தபோதும் ஹேஷ்டேக் ட்ரெண்டானது. சொல்லப்போனால், வெள்ளிக்கிழமை வருகிறார் என்றால் வியாழக்கிழமை காலை முதலே ஹேஷ்டேக் அகில இந்திய அளவில் ட்ரெண்டானது. அப்படி 2 லட்சத்து 15 ஆயிரம் ரீட்வீட்கள் பதிவிடப்பட்டன.
ஆனால், இன்று மாநில அளவில் கூட GobackModi ஹேஸ்டேக் ட்ரெண்டாகவில்லை. சில ஆயிரங்களில் மட்டுமே ரீட்வீட்கள் செய்யப்படுகின்றன. இது பாஜக கட்சியினர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு #ComeBackModi என்னும் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்ய வேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விட்டது.
மேலும், தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வரும் நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்தாக செய்திகள் வெளியாகியதும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்த மாநில முதல்வர்கள்