சென்னை: இளங்கலை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு இந்தியாவில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிலும் இளநிலை மருத்துவப்படிப்பில், நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. மேலும் ஆட்சி அமைந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்தபின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன் அடிப்படையில் ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது. அந்தக்குழு, நீட் தேர்வினால் தமிழ்நாடு மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், விலக்கு பெறுவதற்கான சட்ட ஆலோசனைகளையும் அரசிற்கு தெரிவித்தது.
தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சட்ட முன்வரைவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பாஜக தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்த சட்ட முன்வரைவை ஆதரித்து வாக்களித்தன. அதனைத் தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ்நாடு சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் தற்போதைய நிலை என்ன? என்ற கேள்விக்கு, அது பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் - 12ஆம் வகுப்பு மாணவன் உள்பட இருவர் கைது