சென்னை: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏறக்குறைய 80 லட்சம் பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கிராமப்புற மக்களுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் ஒரு நல்வாய்ப்பாக உள்ளது.
இத்திட்டத்தில், லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டின் ஊரடங்கு காலங்களில் அரசு மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கரோனா நெறிமுறையை பின்பற்றி சமூக இடைவெளியுடன் பணியாளர்கள் வேலை பார்க்கலாம் என்று அறிவித்திருந்தது.
அதன்படி, பெரும்பாலான வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் வேலை நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களை தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டபோது அந்தந்த பஞ்சாயத்து செயலாளர்கள் வார இறுதியில் பணியாளர்களுக்கு சம்பளத்தை கையெழுத்து பெற்றுக்கொண்டு கைகளில் கொடுத்தனர். பிறகு இதில் முறைகேடு நடந்ததால் தற்போது பணியாளர்கள் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டார்கள். தற்போது ஒவ்வொரு வாரம், வேலை முடிந்தவுடன் வங்கியில் அல்லது ஏடிஎம் மூலம் எடுத்துக்கொள்ளலாம்.
150 நாட்களாக உயர்த்த வேண்டும்
இதுபற்றி, பாரதிய கிசான் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் என்.வீரசேகரன் கூறுகையில், "ஊரக பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது நல்வாய்ப்பாக இருக்கும். குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் அமல்படுத்தப்பட்டதால் பெரும்பாலான மக்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர்.
இந்த காலக் கட்டத்த்தில் ஏழை, எளிய மக்களுக்கு இந்த பணியை கொடுப்பதால் மக்கள் சிரமமின்றி தங்களது குடும்பத்தை நடத்தலாம்" என கூறிய அவர், வேலை நாட்களை 100இல் இருந்து 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
கரோனா பெருந்தொற்றால் கிராமப்புற மக்களுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணியாற்றுபவர்களின் ஊதியம் கால தாமதமின்றி வழங்கப்படும் என்பதை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது வெறும் 80 ரூபாய்தான் ஒரு நாள் ஊதியமாக இருந்தது. பிறகு 100 ரூபாயாக உயர்த்தப்பட்டு, அதன் பிறகு 180 ரூபாயாக அதிகரித்தது. கடந்த ஆண்டு மத்திய அரசின் உத்தரவுப்படி, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஒரு நாள் ஊதியத்தை 229 ரூபாயிலிருந்து, 256ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுவரை ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 100 நாட்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. எனினும், வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பதே கிராமப்புற மக்களின் எதிர்பார்ப்பு.
திட்டத்தின் தொடக்கம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சாதாரண கிராமப்புற மக்கள் 8 மணிநேரம் வேலை பார்த்து வருகின்றனர். இத்திட்டம், மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசால் 2006ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள 200 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டு பிறகு படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது.
இதில் தமிழ்நாட்டில் கடலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 2, 2006 ஆண்டில் தொடங்கப்பட்டது. பிறகு எல்லா மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட்டது.
தரவு: இன்றைய நிலவரப்படி (மே 12)
மொத்த மாவட்டங்கள்: 36
மொத்த வட்டங்கள்: 388
மொத்த வேலை அட்டை: 90.8 லட்சம்
மொத்த வேலையாட்கள்: 130.58 லட்சம்
மொத்த செயலில் உள்ள வேலை அட்டைகள்: 72.35 லட்சம்
மொத்த செயலில் உள்ள வேலையாட்கள்: 88.26 லட்சம்
இதையும் படிங்க: 'குக்கூ.. குக்கூ.. நர்ஸூ பண்ணும் சேவைக்கு..' - வைரல் வீடியோ!