திருவாரூர்: கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 10 நாள்களுக்கும் மேலாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று அடியக்கமங்கலம் பகுதியிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும் டெல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நேற்று தொடங்கியது.
இச்சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக தீர்மானம் நிறைவேற்றும் வரை இப்போரட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நாகப்பட்டினம்:
மயிலாடுதுறை கூறைநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் 4ஆவது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை வடக்கு மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ‘மயிலாடுதுறை ஷாகீன் பாக்’ எனத் தலைப்பிட்டு நடத்தப்படும் இந்தப் போராட்டத்திற்கு, கூறைநாடு ஜமாத் தலைவர் சபீர் அகமது தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
அதேபோல் நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் சியான் மரைக்காயர் தெருவில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் இஸ்லாமியர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இப்போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதேனும் நடைபெறாமல் இருக்க பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது. பாஜக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகத் தமிழ்நாடு முழுவதும் நேற்று பேரணி நடத்தியிருக்கிற நிலையில் நாகூரில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை இரவில் தொடங்கியுள்ளனர்.
தேனி:
பெரியகுளத்தில் உள்ள ரஹ்மத் மஸ்ஜித் பள்ளிவாசலில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் 17 நாள்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் 18ஆவது நாளான நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி 1,100 அடி நீளமுடைய தேசிய கொடியை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஊர்வலமானது பெரியகுளம் தென்கரை பள்ளிவாசலில் தொடங்கி வடகரை ரஹ்மத் மஸ்ஜித் பள்ளிவாசலில் நிறைவடைந்தது. இதில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு ஆதரவாக வாக்களித்த மாநில அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
சென்னை:
ஆலந்தூர் ஆசர்கானாவில், டெல்லியில் நடந்த கலவரத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இஸ்லாமிய வழிப்பாட்டுத் தலங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் பரங்கிமலை தபால் நிலையத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை துண்டாடும் எதிர்க்கட்சிகள்: பேரணியாக சென்று ஆட்சியரிடம் பாஜக மனு!