17-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்டிபிஐ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என 10க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இயக்கங்கள் முடிவெடுத்திருக்கின்றன.
இது சம்பந்தமாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம் பாக்கர் கூறியதாவது:
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கூட்டணிக்கு எங்கள் ஆதரவை அளிக்கிறோம். மற்ற திராவிட கட்சிகள் எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்யக் கூட முன்வராத நிலையில் நாங்கள் கேட்ட 10 அம்ச கோரிக்கைகள் அப்படியே அவர்களது தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. மேலும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில் எங்கள் சமுதாய இயக்கமான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் தெகலான் பாகவிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி இருப்பதால் அவர்களுக்கு ஆதரவு தருகிறோம்.
மேலும் இந்தக் கூட்டணிக்கு எங்கள் தொப்புள்கொடி உறவுகளான இந்து ,கிறிஸ்தவ சமுதாய மக்களும் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என அவர் கூறினார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய தவ்ஹீத் ஜமாத், இந்திய தேசிய லீக், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஜனநாயக முற்போக்கு முன்னணி கட்சி மற்றும் பல இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.