சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வருபவர் நிருபன் சக்ரவர்த்தி. இந்த நிறுவனத்திலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நவுக்ரி டாட் காம் இணையதளம் மூலமாக மலேசியாவில் பணிபுரிவதற்காக விண்ணப்பித்தவர்களின் தொலைபேசி எண்களை எடுத்து, மலேசியாவில் பல்வேறு வேலைகள் இருப்பதாக அழைப்பு விடுக்கப்பட்டது.
35 நாட்களில் மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகவும், விண்ணப்பிக்க விரும்பினால் தலா 50 ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளனர். இதனை நம்பி 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தலா 50ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தியுள்ளனர். பின்னர் மூன்று மாதத்திற்குப் பின்பு பணம் கட்டிய இளைஞர்கள் தொடர்பு கொண்ட போது நிருபன் சக்கரவர்த்தியின் கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த இளைஞர்கள், நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். ஆனால் அலுவலகம் மூடிய நிலையில் இருந்ததால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் நிருபன் சக்கரவர்த்தி போலியான பணி ஆணை, மலேசியாவின் அரசாங்க முத்திரை கொண்ட கடிதம் உள்ளிட்டவற்றைக் கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் நிருபனைத் தேடி வருகின்றனர். மேலும், எத்தனை முறை எச்சரித்தாலும் வெளிநாட்டு வேலை மோகத்தில் பட்டதாரி இளைஞர்கள் இப்படி பணத்தை இழப்பதாக காவல்துறையினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.