சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில், விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சினேகன், சிங்கநல்லூர் தொகுதி வேட்பாளர் மகேந்திரன், சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் சினேகா மோகன்தாஸ், அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் பொன்ராஜ் கூறுகையில், "சென்னையில் இருந்து வந்த சில வேட்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. தோல்விக்கான காரணம் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை மேலும் நமக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
தேர்தல் பரப்புரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் குறைவான சுற்றுப் பயணங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தே தோல்விக்கு முக்கிய காரணம். தனித்து போட்டியிட்டிருந்தால் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம்.
அனைத்து தொகுதி வேட்பாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடைபெறும். வெற்றி என்ற புள்ளியை தொடுவதே மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு. மக்கள் நீதி மய்யம் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான போதிய பொருளாதார வசதி இல்லை.
கட்சியின் தொண்டர்களை கடன்காரர்களாக மாற்றக்கூடாது என்பதற்காகவே கூட்டணி வைத்தோம். ஆனால், அது கைகொடுக்கவில்லை. தற்போது வாங்கிய 12 லட்சம் வாக்குகளை 10 மடங்காக உயர்த்த மீண்டும் பணிபுரிவோம்" என தெரிவித்தார்.