தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ‛‛மதுரை - தூத்துக்குடி இடையே தொழில் பெருவழி சாலை அமைக்கப்படும் என முதலில் தெரிவித்தீர்கள். ஆனால் அதை கைவிட்டுவிட்டு, சாத்தியமில்லாத சென்னை - கன்னியாகுமரி சாலை திட்டத்தை அறிவித்திருக்கிறீர்கள்.
முதலமைச்சர் தினமும் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். ஆனால், எந்த அறிவிப்புகளும், திருச்சியை தாண்டுவது கிடையாது. எல்லா அறிவிப்புகளும் திருச்சிக்குள் அடங்கிவிடுகின்றன. தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் இருந்தாலும் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தென் மாவட்டங்களை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கவில்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தென் மாவட்டங்களில் மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயகுமார், தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் எதுவுமே செய்யவில்லை என்பதுபோல் திமுக உறுப்பினர் பேசுவது சரியல்ல. தென் மாவட்டத்தில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்பட்டுள்ளது.
மீண்டும் பேசிய திமுக உறுப்பினர் ராமச்சந்திரன், அமைச்சர் உதயகுமார், திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்தவர். திருமங்கலம் தொகுதிக்கு சிப்காட் வந்திருக்கிறதா? அல்லது 500, 1000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் வந்திருக்கிறதா? எய்ம்ஸ் மருத்துவமனையை கூறக்கூடாது. அது, பல ஆண்டு கோரிக்கை ஆகும்.
ஆலங்குளம் சிமெண்ட் ஆலை விரிவாக்கம் செய்யவும், 8 லட்சம் தொழிலாளர்கள் நம்பியுள்ள தீப்பெட்டி, பட்டாசு தொழில் பிரச்னையை தீர்க்கவும், அரியலுார் சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய தொகையை வழங்கவும், வேலை வாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.