கரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைத்து காண்பிப்பதற்காக, தமிழ்நாடு அரசு நோய் கண்டறியும் சோதனைகள் மேற்கொள்வதை குறைத்து விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 364 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளான மேலும் 3 பேர் இன்று உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகளை குறைத்து விட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். மாநிலம் முழுவதும் இன்றைய நாள் வரை 3,37,841 நபர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 3,25,546 பேருக்கு நோய் தொற்று அறிகுறிகள் இல்லை. இந்த பரிசோதனைகள் அனைத்தும் 39 அரசு மருத்துவமனைகளிலும், 22 தனியார் சோதனை நிறுவனங்களிலும் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 85,000 நபர்களுக்கு நோய் கண்டறியும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, பொது மக்கள் கரோனா வைரஸ் தொற்று குறித்து அச்சப்படத் தேவையில்லை. தற்போது நமக்கு சவாலாக இருப்பது, வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருபவர்களால் தொற்று பரவும் அபாயம்தான்“ எனக் கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று மேலும் 536 பேருக்கு கரோனா; முழு விவரம்!