சென்னை: செந்தில்பாலாஜி தலைமையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளர்கள், மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்களுடன் நேற்று (நவ. 11) காணொலி வாயிலாக ஆய்வுமேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், தீவிரம் அடைந்துள்ள வடகிழக்குப் பருவமழையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
எச்சரிக்கையும் பாதுகாப்பும் முக்கியம்
இக்கூட்டத்தில் செந்தில்பாலாஜி பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் பருவ மழையின்போது ஏற்படும் மின்தடையை உடனடியாகச் சரிசெய்து பொதுமக்களுக்கு மின் விநியோகத்தினை விரைந்து வழங்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
அதேபோல், பணியாளர்கள் தங்களின் பணியின்போது மிக எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும். மின் விபத்தைத் தவிர்க்க பெருமழை பொழியும் இடங்களிலும், நீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து நிலைமை சீரடைந்தவுடன் முழுமையாகக் கள ஆய்வுசெய்த பின்பும், பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்த பின்பும், மின் விநியோகம் வழங்க வேண்டும்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்
மருத்துவமனைகள், குடிநீர் விநியோகம், பொதுமக்களின் பயன்பாடுகள் அதிகம் உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளித்து மின் விநியோகம் செய்ய வேண்டும்.
மின் கட்டமைப்புகளில் ஏற்படும் சேதங்களை விரைந்து சரிசெய்ய தேவையான பணியாட்கள், மின்தளவாடப் பொருள்கள், இதர பாதுகாப்பு உபகரணங்கள், ஜேசிபி, கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் கையாளுவதற்கும், அறுந்துகிடக்கும் மின்கம்பிகளைத் தொடக்கூடாது எனவும் தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
கையிருப்புகள்
ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளரைச் சந்தித்த செந்தில்பாலாஜி, “வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள தற்போது நம்மிடம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் மின்கம்பங்கள், 16 ஆயிரத்து 500 கி.மீ., மின்கம்பிகள், ஏழாயிரம் மின்மாற்றிகள், ஆயிரத்து 71 மின்மாற்றி கட்டமைப்புகள், வி.கிராஸ் ஆரம் ஒரு லட்சம், எர்த் பைப் ஆறாயிரம், குறைந்த அழுத்த கிராஸ் ஆரம் 75 ஆயிரம், உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த இன்சுலேட்டர் எட்டு லட்சம், இழுவை கம்பி 48 ஆயிரம், பில்லர் பெட்டிகள் ஆயிரத்து 270, உயரழுத்த புதைவடம் 65 கி.மீ., தாழ்வழுத்த புதைவடம் 1,000 கி.மீ. கையிருப்பில் உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் சுமார் நான்காயிரம் பொறியாளர்கள், 36 ஆயிரம் மின் ஊழியர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்திலும் செயற்பொறியாளர் தலைமையில் 24 நேரமும் மழைக்கால காண்காணிப்பில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் கவனித்துவருகின்றனர்.
துணைமின் நிலையங்களுக்கு வரும் மின்பாதையில் ஏற்படும் மின்தடையைச் சரிசெய்யவும், மின்பாதையை ஆய்வுசெய்வதற்கும் சிறப்புக் குழுக்கள் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. அதனால், பொதுமக்களுக்கு மின்தடை ஏற்படாவண்ணம் உள்ளது. ஒரு செயற்பொறியாளர் தலைமையில் 20 பேர் கொண்ட குழு 24 நேரமும் பணியில் ஈடுபட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முழுவீச்சில் மறுகட்டமைப்புப் பணிகள்
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்ந்து தொடர்புகொண்டு மழைக்காலத்தில் காண்காணிப்பில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் கவனித்துவருகின்றனர். களப் பணியாளர்களைப் பொறுத்தவரை, அதிகமான மழை பொழியும் சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் 12 ஆயிரத்து 100 பணியாளர்கள் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.
பருவ மழைக்கு முன்னதாக தமிழ்நாடு முழுவதும் மேம்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மின்விநியோகம் பெருமளவு பாதிக்கப்படாவண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஆயிரத்து 757 பீடர்களில் 71 பீடர்கள் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 44.20 லட்சம் மின் நுகர்வோர்களில் 61 ஆயிரத்து 700 (1.3 விழுக்காடு) மின் நுகர்வோர்களுக்கு தற்சமயம் பாதுகாப்புக் கருதி மின்விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் குழு
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள செய்தியாளர் கொண்ட வாட்ஸ்அப் குழுக்களில் பகுதிவாரியான செய்தியாளரையும் இணைத்து அக்குழுவில் பெறப்படும் அனைத்துக் குறைகளையும் உடனடியாக நிவர்த்திசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கருதி மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு விரைந்து மின்சாரம் வழங்கவும், மின்கட்டமைப்பில் ஏற்படும் சேதங்களை விரைந்து சரிசெய்யவும் அலுவலர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் எவ்வித தடங்கலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: சேர்ந்து உழைப்போம் - முன்களப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் ட்வீட்