சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் முதன்மை செயலாளர் அமுதா மற்றும் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடந்த நிதிநிலையில் அறிக்கையில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியில் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
மகளிர் சுய உதவிக்குழு : அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், 'தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளையும் சரிசமமான வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார். நகர்ப்புற கட்டமைப்புக்கு நிகராக கிராமப்புற கட்டமைப்புகளையும் உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தருமபுரியில் சுயஉதவிக் குழுவை தொடங்கி வைத்தார். தற்போது அவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு சிறு குழுவாக தொடங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு, தற்போது வளர்ந்து மிகப்பெரிய நிறுவனமாக மாறியுள்ளது என்றால் அதற்கான பெருமை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையும், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சரையும் சேரும்.
தமிழ்நாட்டில் தற்போது 7 லட்சத்து 22 ஆயிரம் குழுக்களில், ஒரு கோடியே 20 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஆண்டு புதிதாக 32 ஆயிரம் குழுக்கள் தொடங்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 36 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
800 கோடி ஒதுக்கீடு : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் என்ற திட்டம், தீனதயாள் கிராம மேம்பாட்டு திட்டம் ஆகிய இந்த நான்கு திட்டங்கள் மூலம் பெண்களுக்கென 800 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மேற்கண்ட திட்டங்களின் மூலம சிறப்பாக பணி நடைபெற்று வருகிறது.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 48 கோடி சமுதாய முதலீடு, 303 கோடி கூடுதல் நிதியாக அளித்து ஆரம்ப கட்ட தொழில் தொடங்க உதவிகளை செய்து வருகிறோம். இந்த ஆண்டு மகளிர் சுய உதவிக்குழு 20 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 22 ஆயிரம் கோடி ரூபாய் இதுவரை வங்கிகளின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழு நிதி வழங்கப்பட்டுள்ளது.
கருணாநிதியால் கொண்டு வரப்பட்டு கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பூமாலை திட்டம், 66 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மீண்டும் கொண்டு வரப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அறிவிக்கப்பட்ட ஐந்து வாழ்வாதார பூங்காக்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஊரகப் பகுதிகளில் 50 வேளாண் பண்ணைகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் : இரண்டு லட்சம் வீடுகளில் செயல்பட்டுவரும் வீட்டு தோட்டம் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்த ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. சிறு தொழில் செய்பவர்களுக்கு 36 தொழில் தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தகம் மூலம் 300 தொழில் உற்பத்தி குழுக்களின் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் மூலம் 2500 குறு தொழில் நிறுவனங்கள் தொடங்க 15.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 7 கோடி மதிப்பீட்டில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு 417 சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ரத்தானது ஏன்... காரணம் என்ன?'