சென்னை: சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில், இந்தியாவில் உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளதாகவும், இதில் 50 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு மிகவும் திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு அரசின் செயல்பாடுகளில் செய்முறை அனுபவம் அளிக்கும் வகையில் குறுகிய கால மாணவர்களுக்கான நிர்வாக செய்முறை பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி, சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த இருப்பதாகவும், இந்த முயற்சியின் மூலம் மாநிலத்தில் அரசு - மாணவர்கள் - கல்வி நிலையங்களின் இடையே இணைப்பு, வளர்ச்சி,நடவடிக்கையில் அவர்களின் பங்கேற்கும் அதிகரிக்க உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, NIRF தர வரிசையின் படி உயர்நிலையில் உள்ள பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும் எனவும், பயிற்சிக்கான தலைப்புகளில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் துறைகளுடன் கலந்தாலோசித்துத் தேர்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது
சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உயர் கல்வித்துறை மற்றும் இதர பல்கலைக்கழகங்களில் நிர்வாகக் கட்டுப்பாடு கொண்டுள்ள துறைகளுடன் கலந்தாலோசித்து உருவாக்கும் எனவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.