ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று மனுக்கள் மீதான பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் தேர்தலில் முதல் முறையாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி களமிறங்கியுள்ளது. இக்கட்சியின் வேட்பாளர்கள் கடந்த சில தினங்களாக வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.
நேற்று (செவ்வாய்கிழமை) பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செந்தில்குமார் வேட்புமனு தாக்கல் செய்ய தாமதமாக வந்ததால் அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மானாமதுரை இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ராம்கிருஷ்ணனின் மனுவை தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்துள்ளது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கோவை வேட்பாளர் மகேந்திரன், மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர், ஆரணி வேட்பாளர் ஷாஜி, தஞ்சாவூர் வேட்பாளர் சம்பத் ராமதாஸ், கன்னியாகுமரி வேட்பாளர் எபினேசர், திருவள்ளூர் வேட்பாளர் அருண் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.