டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், சென்னையில் நடைபாதைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களால் டெங்கு பரவுவதால், அந்த வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தாக்கல்செய்த அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் 402 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் பாதிப்பு எண்ணிக்கை 54ஆக பதிவாகியுள்ளது.
இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மொத்தம் 52 பேர் மட்டுமே டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயல்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல்செய்யபட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் டெங்குவைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு