சென்னை: கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் கஞ்சா, பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை கடந்த 18 ஆம் தேதி நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த காவல் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல் துறையினர் அயனாவரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
பின்னர் காலை 7.30 மணியளவில் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை நடத்தி வந்த போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு விக்னேஷ் (25) இறந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. விக்னேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து எழும்பூர் குற்றவியல் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் விக்னேஷின் உடல் உடற்கூராய்வு நடத்தப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவால் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர் விக்னேஷின் உடல் அவரது அண்ணன் வினோத்திடம் ஒப்படைக்கப்பட்டு, மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் விக்னேஷ், சுரேஷ் போதையில் காவல் துறையினரை தாக்க வந்ததாகவும், ஆட்டோவில் இருந்து இறங்கும் போதே ரத்தகாயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் லாக்-அப் மரணத்தை மறைக்க 1 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. விக்னேஷ் மரணம் தொடர்பாக பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சந்தேக மரணம் தொடர்பாக துறை ரிதீயான விசாரணை நடத்தப்பட்டு, விக்னேஷை கைது செய்த காவல் கட்டுப்பாட்டு அறையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தலைமை செயலக காலனி காவல் நிலைய காவலர் பொன்ராஜ் மற்றும் ஊர்காவல்படையை சேர்ந்த தீபக் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இவ்வழக்கின் மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்நிலையில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சரவணன் நியமிக்கப்பட்டு, நேற்று (ஏப்.26) முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. விக்னேஷ் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு சென்ற சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் விக்னேஷ் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை பார்வையிட்டு, அதில் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர்.
அடுத்தப்படியாக விக்னேஷின் குடும்பத்தினரை அழைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து விக்னேஷை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : அதிமுக மாநில நிர்வாகி சஜீவனிடம் 7 மணி நேரம் விசாரணை.. அடுத்து யார் ?