சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் சார்பில் நவாஸ்கான், தேமுதிக சார்பில் மோகன்ராஜ் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,
அதிமுக சார்பாக தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியபோது உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காடு பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்ததாகவும், உள்ளாட்சித் தேர்தல் தடைப்படாத வகையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, நீதிமன்றத்தின் வாயிலாக எதிர்கட்சியினர் தடை பெறாதவாறு தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக குறிப்பிட்ட அவர், கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்படாத போது எவ்வாறு இருந்ததோ அதேபோல் தற்போது உள்ளாட்சி அமைப்புகள் செயல்படும் என்றார்.