சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கு அரசால் இலவசமாக பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்களை கடத்தல், பதுக்கல், கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் இயக்குநர் ஆபாஸ்குமார் உத்தரவின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் தலைமையில், பல குழுக்களாகப் பிரிந்து தமிழ்நாடு முழுவதும் தீவிர தணிக்கை, வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ரேசன் அரிசி பதுக்கல்
இவ்வாறு மாநிலம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டதில், கடந்த ஆறு மாத காலமாக, பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேசன் அரிசி வாங்கி பதுக்கி, கள்ளச்சந்தையில் அண்டை மாநிலங்களுக்கு வாகனங்களில் கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக 3,804 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 2,628 மெட்ரிக் டன் ரேசன் அரிசி பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் தொடர்புடைய 631 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டு 3,897 நபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 10 மெட்ரிக் டன் மேல் கைப்பற்றி 51 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அதில் 901 மெட்ரிக் டன் ரேசன் அரிசி, 76 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் - கலப்பட டீசல் - எரிவாயு உருளைகள்
மேலும் மண்ணெண்ணெய் தொடர்பாக 139 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 15 ஆயிரத்து 780 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 142 நபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் 32 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அதில் மூன்று லட்சத்து 24 ஆயிரத்து 246 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்செய்யப்பட்டது. மேலும் அந்த டீசல் ஏற்றிவந்த 39 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கடத்தல் செயலில் ஈடுபட்ட 91 நபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு உருளைகள் தவறுதலாக வணிக பயன்பாட்டிற்குப் பயன்படுத்தியதாக மொத்தம் 347 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அதில் 420 எரிவாயு உருளைகள் பறிமுதல்செய்யப்பட்டு 345 நபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டம்
கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 46 முக்கியக் குற்றவாளிகள் கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டம் 1980 இன்கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கியக் குற்றவாளிகளை கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் தடுப்பு காவலில் அடைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், அத்தியாவசிய பொருள்கள் கடத்தல், பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வோர் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவலர்கள் தெரிவித்துள்ளனர்.