நடிகை நயன்தாரா நடித்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி, “கையெடுத்து கும்பிடணும் போல இருப்பவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள், கூப்பிடணும் போல இருப்பவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள்” என்றார். அவரது இந்த பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை இன்று காலை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ராதாரவி மீது திமுக எடுத்திருக்கும் ஒழுங்கு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றார்.
முன்னதாக, நடிகை நயன்தாரா தொடர்பாகதான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், இருப்பினும் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் ராதாரவி கூறியிருந்தார்.