ராயபுரம் பகுதியில் உள்ள செயின்ட் ஆன்னீஸ் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய பின், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசு தான். வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என ஏற்கனவே முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தான் பெரும்பான்மையான கட்சி என்று ஏற்றுக்கொள்ளும் நிலை வந்திருக்கிறது. அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அதையே பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவியும் தெரிவித்துள்ளார். கூட்டணியில் பாமகவும் உள்ளது. கூட்டணி வேறு கொள்கை வேறு. வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை மனு குறித்து, ஜாதி வாரி கணக்கெடுப்பு முடிந்தபின் தான் முடிவு செய்யப்படும்.
நாட்டு நடப்பு தெரியாமல் கமல் ஹாசன் பேசி வருகிறார். பேப்பர் படிக்காமல், செய்திகள் பார்க்காமல் பிக்பாஸில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவர், தமிழகம் வெற்றி நடை போடுவது தொடர்பாக பேச எந்த முகாந்திரமும் இல்லை. குடும்ப அரசியலால் திமுகவில் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை வெடிக்கலாம். திமுகவில் உழைப்பவர்கள் யாரும் முதலமைச்சராக முடியாது. போஸ்டர்தான் அடிக்க முடியும்” என்றார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு