மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமான மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளில், பள்ளிகளில் உறுதிமொழி ஏற்க வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதன் அடிப்படையில் பள்ளிகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24 ஆம் தேதி மாநில குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எனவே, பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
உறுதி மொழி:
"இந்திய குடிமகன் ஆகிய நான் ஜாதி மதம் இனம் மொழி சமூக-பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன்.எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையையும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன். எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வன்முறைகள், எந்த ஒரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன்.
இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி, பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன். குழந்தை திருமணம் பற்றி தெரியவந்தால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன்.
நான் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்" என்று உறுதிமொழி ஏற்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பாலின நீதியை நிலைநாட்டுவதில் உச்ச நீதிமன்றம் இலக்குடன் செயல்படுகிறது' - ராம்நாத் கோவிந்த்