திமுகவில் தலைவருக்கு அடுத்தப்படியான முக்கிய பொறுப்புகளாக இருப்பவை பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள். இப்பொறுப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (செப்டம்பர் 2) வழங்கப்பட்டன. இந்நிலையில், பொதுச்செயலாளராக தற்போதைய கட்சிப் பொருளாளர் துரைமுருகனும், பொருளாளராக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” திமுக வரலாற்றில் முதன் முறையாக ஆன்லைனில் கட்சியின் பொதுக்குழு வரும் 9ஆம் தேதி கூடுகிறது. இக்கூட்டத்தை நடத்துவது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுடன் நாளை (செப்டம்பர் 3) ஆலோசனை நடைபெற உள்ளது.
பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு நாளை மனுத்தாக்கல் நடைபெறுகிறது. தேர்தலா? ஒருமித்த கருத்தா? என்று நாளை மறுநாள் தெரிந்துவிடும். திமுக விதிகளில் உள்ள அதிகாரத்திற்கு ஏற்ப பொதுச்செயலாளரின் செயல்பாடுகள் இருக்கும்.
இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் சரிவைக் கண்டுள்ளது. இதற்கு காரணம் பொருளாதாரம் அறிந்தவர்கள், பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. அதோடு மட்டுமல்லாமல், இரண்டு ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் தங்கள் பதவிகளிலிருந்து விலகியதும் இந்த அரசின் காலக்கட்டத்தில்தான் ” எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்!