சென்னை: சென்னை முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் ராமசாமி, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதர் ராமசாமி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராகவும், 12ஆம் வகுப்புக்கு வகுப்பாசிரியராகவும் செயல்பட்டு வந்துள்ளார். பெண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர் வகுப்பு ஆசிரியராக இருக்கக்கூடாது என்ற விதியை மீறி ஸ்ரீதர் ராமசாமி வகுப்பு ஆசிரியராக செயல்பட்டு வந்துள்ளார்.
மேலும் ஸ்ரீதர் ராமசாமி அரசின் நீட் இலவச பயிற்சி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இதைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் குழு அமைத்து, மாணவிகளிடம் இரவு நேரங்களிலும் ஆபாசமாக பேசி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் வாங்கி தருவதாக கூறியும், மாதிரி வினாத்தாள் மற்றும் பயிற்சி புத்தகங்கள் தருவதாக கூறியும் பல மாணவிகளிடம் தவறாக பேசியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஸ்ரீதர் டியூஷன் எடுக்கும் போதும், ஆபாசமாக பேசி மாணவிகளிடம் அத்துமீற முயற்சித்ததும், பள்ளி மாணவிகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, பாட்டிக்கு உடல் நிலை சரியில்லை என ஒரு மாத காலம் விடுமுறை எடுத்ததால், தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வகுப்பு ஆசிரியர் என்பதால், இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஶ்ரீதர், தேர்வு எழுத உதவி செய்வதாக கூறி மாணவியிடம் ஆபாசமாக பேசி அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஸ்ரீதரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை போலீசார் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். பல மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆதாரங்களை ஸ்ரீதர் அழித்திருப்பது தெரியவந்துள்ளதால், அதை மீட்க சைபர் ஆய்வகத்திற்கு செல்போன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆசிரியர் ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பயப்படாமல் முன்வந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் எனவும், மாணவிகளின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி - ஆந்திராவைச் சேர்ந்த பெண் கைது