சென்னை : கர்நாடகாவைச் சேர்ந்த மகேஷ் ரெட்டி என்பவர், தனது கமலா ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் மூலம் 'தி கிரிமினல்' என்ற திரைப்படத்தைத் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த சுதீசிகன் என்பவர் இயக்கி வந்தார். படத்தை இயக்க 10 லட்சம் ரூபாய் சம்பளமும், பிற மொழிகளில் டப்பிங், ரீமேக் என எடுக்கும்போது, அதற்கான உரிமைத் தொகையில் 25 விழுக்காடு இயக்குநருக்கு வழங்குவது எனவும் மகேஷ் ரெட்டி ஒப்பந்தம் செய்தார்.
இயக்குநர் கொடுத்தப் புகார்
ஆனால், ஆறுமுகம் என்பவரின் இயக்கத்தில் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால், தமிழ்நாடு சினிமா இயக்குநர்கள் சங்கத்தில் சுதீசிகன் கடந்த செப்டம்பர் மாதம் இரு புகார்கள் அளித்தார்.
எவ்வித நோட்டீஸ் கொடுக்காமலும், தகவல் தெரிவிக்காமலும் இயக்குநரை மாற்றிய தயாரிப்பாளர் மகேஷ் ரெட்டி வெளியிட திட்டமிட்டுள்ள 'தி கிரிமினல்' படத்தை வெளியிடத் தடை விதிக்கக்கோரி சுதிசீகன் சென்னை மாவட்ட 24ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிறப்பித்த உத்தரவில், இயக்குநர் சுதீசிகன் தாக்கல் செய்த ஆவணங்களில், குற்றச்சாட்டுகளுக்கான முகாந்திரம் இருப்பதால் மகேஷ் ரெட்டியின் 'தி கிரிமினல்' படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள், விளம்பரப்படுத்துதல், டப்பிங், ரீமேக், திரையரங்கம் அல்லது ஓடிடி வெளியீடு ஆகியவற்றுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வழக்கு குறித்து நடிகர் மகேஷ் ரெட்டி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: இட்லி விற்று குடும்பத்தைத் தாங்கும் அலமேலு அம்மா - இது ஓர் சாமானியரின் கதை!