தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்தும், மேலும் பரவாமல் தடுக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,
- இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் தவிர, மற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இணைய வழியில் வகுப்புகள் நடத்த வேண்டும்.
- ஏதேனும் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தால் உரிய வழிமுறைகளை பின்பற்றி இம்மாதத்திற்குள் தேர்வுகள் நடத்தி முடிக்க வேண்டும்.
- உள்ளரங்குகளில் மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 600 நபர்களுக்கு மிகாமல் வழிமுறைகளை கடைபிடித்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
- கூட்டங்களுக்கு வருவோர் அனைவரும் முகக்கவசம் அணிவதை கூட்ட ஏற்பாட்டாளர் உறுதி செய்யவேண்டும். அதனை அக்கூட்டத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்கும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
- தொழிற்சாலைகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும்.
- பேருந்துகள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதனை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
- வணிக வளாகங்களில் உள்ள உணவகங்கள், திரையரங்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தளர்வின்றி பின்பற்ற வேண்டும்.
மேலும், நோய்த் தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதற்காக காய்ச்சல் முகாம்கள் மற்றும் ஆர்டிபிசிஆர் சோதனைகளுக்கு மாதிரி எடுக்கும் ’நடமாடும் மாதிரி சேகரிக்கும் மையங்கள்’, மாவட்டங்களில் ’கோவிட் கவனிப்பு மையங்கள்’ ஆகியவற்றை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மூத்த அதிகாரிகள் குழுவாக செயல்பட்டு நோய்த் தொற்று மற்றும் நோய் தொற்றின் போக்கை கண்காணிக்கவும், பரவாமல் தடுக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் கரோனா தடுப்பூசி!