பொதுமுடக்கத்திற்கு பின்னான தளர்வுகளை அடுத்து சென்னை மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனாலும், மிகவும் குறைந்த அளவிலான மக்களே அதில் பயணித்தனர். நோய் பரவல் அச்சம் காரணமாகவும், பொருளாதார நடவடிக்கைகள் நடைபெறாததாலும் மக்கள் பயன்பாடு குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. தற்போது மெல்ல மெல்ல கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 13 லட்சத்து 43 ஆயிரத்து 695 பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட சேவையிலிருந்து ஆண்டு இறுதி வரை, 31 லட்சத்து 52 ஆயிரத்து 446 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அண்மையில் தொடங்கப்பட்ட க்யூஆர் கோடு பயணச்சீட்டு நடைமுறையை பயன்படுத்தி, கடந்த செப்டம்பர் முதல் கடந்த ஜனவரி வரை ஒரு லட்சத்து 09 ஆயிரத்து 505 பேரும், பயண அட்டையை பயன்படுத்தி 24 லட்சத்து 80 ஆயிரத்து 185 பேரும் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் க்யூஆர் கோடு நடைமுறையை பயன்படுத்தி 25,692 பயணிகள் சென்றுவந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
கரோனா பரவலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய, ரயில்கள், ரயில் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், டிக்கெட் விநியோகமும் ஒருவருக்கு ஒருவர் தொடாத வகையில் இணைய வழியில் நடைபெறுவதாகவும் சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாவடி குளத்தில் படகு சவாரி திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை