சென்னை தியாகராய நகரில் நடைபெற்றுவந்த மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வுசெய்தார். ஆய்வின்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,
"நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 2,500 நபர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனைக் கட்டுப்படுத்த 12,000 தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று, பரிசோதனை செய்ய, பணியமர்த்தி உள்ளோம்.
அவர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்ய தெர்மல் ஸ்கேன், நாடித்துடிப்பு பரிசோதனை செய்யும் கருவி தரப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ முகாம்கள் அதிகளவில் நடைபெற்றுவருகின்றன. அது பெரும் அளவில் பயன்பெறுகிறது.
400 மருத்துவ முகாம்
தற்போது 8,000 தன்னார்வலர்கள் பணியில் இருக்கின்றனர். இந்த வார இறுதிக்குள் 12,000 தன்னார்வலர்கள் பணிக்கு வருவார்கள். ஒரு வார்டுக்கு இரண்டு மருத்துவ முகாம் என 400 மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.
தற்போது மூன்று திரையிடல் மையங்கள் (screening center) பயன்பாட்டில் உள்ளன. மேலும் 12 இடங்களிலும் திரையிடல் மையம் அமைக்கப்பட உள்ளது. கோவிட் பராமரிப்பு மையத்தில் கிட்டத்தட்ட 12,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
450 மையங்களில் தடுப்பூசி
சென்னையில் ஒரு மில்லியன் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், 10 முதல் 15 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. தொடர்ந்து, 450 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
கோவிட் தடுப்பூசிகள்
மொத்தம் 10 லட்சத்து ஒன்பதாயிரத்து 715 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதில், கிட்டத்தட்ட எட்டு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி இரண்டு லட்சத்து 52 ஆயிரத்து 199 நபர்களுக்குப் போடப்பட்டுள்ளது.
230 முன்களப் பணியாளர்கள்
230 முன்களப் பணியாளர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். கரோனா வைரஸ் (தீநுண்மி) மிக வேகமாகப் பரவுவதால், பொது இடங்களில் அவசியமின்றி கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கோயில்களுக்கு நேரில் சென்றுதான் மக்கள் வழிபட வேண்டும் என்றில்லை. மனத்திலேயேகூட தெய்வத்தை வழிபடலாம். கரோனா தடுப்பு நடவடிக்கையை மக்கள் பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: '’ஸ்புட்னி வி’ தடுப்பூசி: ஆண்டுக்கு 85 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யவுள்ள இந்தியா!'