சென்னையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளிக்கிறது. அதன்படி பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக உள்ளது.
இது குறித்து, எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ். இரவிச்சந்திரன், "பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்த மழைநீரை வெளியேற்ற உடனடியாக கல்வெட்டு கால்வாய் அமைக்க வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தார்.
மேலும் அதற்கான மனுவை தலைமைச் செயலகத்திலுள்ள நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலரிடம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர், "பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அதனை வெளியேற்றவும், மீண்டும் தண்ணீர் தேங்காமலிருக்கவும், ரித்தர்டன் சாலை, தினத்தந்தி அலுவலகம், ஜோதி வெங்கடாசலம் சந்திப்பு ஆகிய இடங்களில் கல்வெட்டு கால்வாய் போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்து மனு அளித்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேனியில் கனமழை: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு