சென்னை: புதுச்சேரி மாநில அரசு நிறுவனமான பாசிக்கில் (குடிநீர் வினியோகம் மற்றும் காய்கறிகள் விற்பனை நிறுவனம்) சம்பளம் பாக்கி தொடர்பாக 48 ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மூன்று மாதங்களுக்குள் பாசிக்கில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமென கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சம்பளம் வழங்காததால், ஊழியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புதுச்சேரி தலைமை செயலாளர் அஸ்வினி குமார், வேளாண் துறை செயலாளர் ரவி பிரகாஷ், இயக்குனர் பாலகாந்தி ஆகியோர் நேற்று (டிசம்பர் 10) ஆஜராக உத்தரவிட்டது.
இதையடுத்து தலைமை செயலாளர் அஸ்வினி குமார் தவிர மற்றவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபானி, தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார், துறைச் செயலாளர் ரவி பிரகாஷ் ஆகியோர் நேரில் ஆஜராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதன்முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பேருந்து சேவை!