வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ராஜஸ்தானிலிருந்து குறிப்பிட்ட வாகனத்தில் போதைப்பொருள் எடுத்துச் செல்லப்படுவது அலுவலர்களுக்கு தெரியவந்தது.
குறிப்பாக அலுவலர்களுக்கு போதைப்பொருள் கடத்தப்படும் வாகனம் தொடர்பாக கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்து, தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் சுங்கசாவடி அருகே நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வெள்ளை நிற கார் ஒன்றை அலுவலர்கள் சோதனை செய்தனர். இரண்டு பெண்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், ராமேஸ்வரம் கோயிலுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாகக் கூறி அலுவலர்களிடம் ஓட்டுநர் நாடகம் ஆடியுள்ளார்.
அதன்பின் காரின் பின்பக்க டிக்கியில் திறந்து பார்க்கும் போது, அதில் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடம் வித்தியாசமாக அலுவலர்களுக்கு தென்பட்டது. இதனையடுத்து ஸ்பீக்கர் இருக்கும் பகுதியை ஆய்வு செய்ததில் 3.2 கிலோ ஹெராயின் போதை பொருள் மறைத்து வைத்திருப்பதை அலுவலர்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
முக்கிய குற்றவாளி எங்கே... சுற்றுலா செல்வதற்காக வந்த வட இந்திய பெண் உள்ளிட்ட இருவரை விசாரித்தபோது, அவர்கள் டிராவல்ஸ் என நம்பி வந்ததாக தெரிவித்தனர்.இதனையடுத்து அலுவலர்கள் அவர்களை அனுப்பி வைத்தனர். மேலும் காரில் பயணித்த இருவரை விசாரணை மேற்கொண்டதில் ஹெராயின் கடத்துபவர்கள் என்பதை அலுவலர்கள் கண்டுபிடித்தனர். விசாரணை செய்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்ராவ் என்பது தெரியவந்தது.
இருவரையும் மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் கைது செய்தனர். பிடிபட்டவர்களிடம் விசாரணை செய்தபோது ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராமநாதபுரத்தில் உள்ள மண்டபத்திற்கு ஹெராயின் கடத்த முயன்றது தெரியவந்தது.
அங்கிருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. சுற்றுலாவுக்கு வட இந்தியர்களை அழைத்து செல்வதாக கூறினால் , பிடி பட மாட்டோம் என்ற அடிப்படையில் போதை பொருளை மறைத்து கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். முக்கிய குற்றவாளி ஒருவர் ராமநாதபுரத்தில் பதுங்கி இருப்பதாகவும், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஹெராயின் போதைப் பொருள் வடமாநிலத்தில் எங்கிருந்து மொத்தமாக இந்தியாவிற்குள் நுழைந்தது என்பது குறித்தும், தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் சப்ளை செய்யப்படுகிறது என்பது குறித்தும் விசாரணைநடைபெற்று வருகிறது. இதில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தர்மபுரி: காரில் ஹெராயின் கடத்திய இருவர் கைது