சென்னை மீனம்பாக்கம் அருகே கார் மோதி இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற சண்முகம் என்பவர் படுகாயம் அடைந்தார்.
தனக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு, மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் சண்முகம் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த தீர்ப்பாயம், சண்முகத்திற்கு 39 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.
இந்த இழப்பீட்டை அதிகரிக்கக் கோரி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவிற்கு பதிலளித்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், வாகனம் ஓட்டிச் சென்றபோது சண்முகம் மது அருந்தி இருந்ததாகத் தெரிவித்தது. இதனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சண்முகத்திற்கு, 39 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பீடு வழங்கச் சொன்ன தீர்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் பலியாவதாகவும், அதில் 70 சதவீதம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றபோது இறந்தனர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டிய நேரமிது என யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பயணச்சீட்டு மோசடி வழக்கு: நடத்துநர் பணிநீக்கம் செல்லும் - உயர்நீதிமன்றம்