சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி அமலுக்கு வரும் என உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெண்களுக்குத் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்குப் பதிலாக, இத்திட்டம் அரசுப்பள்ளிகளில் படித்து, கல்லூரிகளில் படித்துவரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டமாக மாற்றப்பட்டது.
கல்வி உதவித்தொகை திட்டம்: இதுகுறித்து உயர் கல்வித்துறை வட்டாரங்கள் கூறும்போது, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து, கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட பலவகையான உயர்கல்வி படிப்புகளை படித்துவரும் மாணவிகளுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.
அதன்படி நான்கு லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள். குறிப்பாக கலை அறிவியல் படிப்புகளில் மட்டும் ஒரு லட்சம் மாணவிகள் பலன்பெற இருக்கின்றனர்.
கல்லூரி மாணவிகளுக்கு பலனளிக்கக்கூடிய இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டம், காமராஜர் பிறந்தநாளான வரும் ஜூலை 15ஆம் தேதி அமலுக்கு வர இருப்பதாகவும், ஆயிரம் ரூபாய் மாணவிகளுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் உயர் கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம் காரணமாக உயர் கல்வி பயிலக்கூடிய மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், இந்தத் திட்டம் வரவேற்கக் கூடியது என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கோடை விடுமுறை அறிவிப்பு - குஷியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்'