சென்னை: சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5 ஆயிரத்து 270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக 622 எண்ணிக்கையிலான உட்புறத் தார் சாலைகள், 307 எண்ணிக்கையிலான உட்புற கான்கிரீட் சாலைகள், 79 எண்ணிக்கையிலான பேருந்து சாலைகள், இரண்டு சாலைகளில் நடைபாதைகள் சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது என மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இணையவழி ஒப்பங்கள்
இந்தச் சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ. 109.60 கோடி, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் இருந்து ரூ.37.58 கோடி என மொத்தம் ரூ.147.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக மணலி மண்டலத்திற்கு ரூ. 13.84 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
1,008 சாலைப் பணிகளும், இரண்டு சாலைகளில் நடைபாதை பணிகளும் என மொத்தம் 1,010 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட மாநகராட்சி சார்பில் ஒப்பம் கோரப்பட்டுள்ளது.
சாலைப் பணிகளை மேற்கொள்ளும்போது பழைய சாலைகளை முழுவதுமாக அகழ்ந்தெடுத்து (Milling) புதிய சாலைப் பணிகளை மேற்கொள்ளவும், ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் இணையவழி ஒப்பங்களாக (E-Tender) மட்டுமே கோரவும், ஒப்பங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டு சாலைப் பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு மாநகராட்சி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’சாலையில் நடக்கும் மோதல்களுக்கு கட்சி பொறுப்பாகாது'-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்