சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் கவுரிவாக்கம், சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர்ராஜா (40). இவர் கட்டுமான ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது முகநூல் பக்கத்தில் இருசக்கர வாகனம் ஒன்று 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது என விளம்பரம் ஒன்று வந்துள்ளது.
அதில் உள்ள தொலைபேசி எண்ணை சுதாகர்ராஜா தொடர்பு கொண்டு பேசியபோது அந்த நபர் இந்தியில் பேசியதால் தனது நண்பனை வைத்து பேசியுள்ளார். அப்போது அந்த நபர் விளம்பரத்தை பதிவு செய்தது தான் என்றும், தான் ஒரு ராணுவ அதிகாரி, தன் பெயர் முகமது ரபீக் எனவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் நான் பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் வசித்து வருவதாக கூறிய அவர் தனது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்ய உள்ளதால் முகநூலில் பதிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் இருசக்கர வாகனம் உங்களுக்கு வேண்டும் என்றால் கொரியர் மூலமாக அனுப்புகிறேன். அதற்கான முன் பணமாக 3 ஆயிரம் ரூபாய் ஜி பே மூலம் அனுபுங்கள் என கூறவே, அதை நம்பிய சுதாகர்ராஜா ஜி பே மூலமாக பணத்தை அனுப்பி வைத்துள்ளார். தனது விலாசம் மற்றும் ஆதார் கார்டு நகல் மற்றும் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலமாக அனுப்பியுள்ளார்.
இதையடுத்து சுதாகர்ராஜாவிற்கு வேறுயோரு செல்போன் நம்பரில் இருந்து தொடர்புகொண்டு பேசிய நபர் இருசக்கர வாகனம் கொரியர் அலுவலகத்தில் இருப்பதாகவும் 7000 ரூபாய் கொடுத்தால் வண்டியை வீட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து பணம் வாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதால் சந்தேகமடைந்த சுதாகர்ராஜா முகமது ரபிக்கை மீண்டும் தொடர்பு கொண்டபோது அந்த நபர் அழைப்பை எடுக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுதாகர்ராஜா ஆன்லைனில் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என சேலையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் ஆன்லைனில் மோசடி செய்த நபர் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!