சென்னையில் கறுப்புப் பூஞ்சைக்குப் பயன்படுத்தக்கூடிய மருந்தினை கள்ளச்சந்தையில் சில நபர்கள் விற்பதாக மருந்து ஆய்வாளர் முரளிகிருஷ்ணன் அண்ணா சாலை காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.
இந்தத் தகவலின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கறுப்புப் பூஞ்சை மருந்து தேவைப்படுவதாகக் கூறி அந்த நபருக்கு போன் செய்து எல்ஐசி அருகே கொண்டுவரும்படி நடித்துள்ளனர். அப்போது, அண்ணா சாலை எல்ஐசி அருகே காவல் துறையினர் மறைந்திருந்த போது அங்கு ஆட்டோவிலிருந்துவந்த இரு பெண்கள் பையில் 8 மருந்து குப்பிகளை கொண்டுவந்தபோது இரு பெண்களையும் காவல் துறையினர் மடக்கிப்பிடித்தனர். மேலும் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் பிடித்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த உம்முகுல்சம் (26), கானாத்தூரைச் சேர்ந்த பவுசானா (32), விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேஷ்(21), செங்கல்பட்டைச் சேர்ந்த விவேக் (25) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் நால்வரும் இணைந்து கறுப்புப் பூஞ்சை நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்தினை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.
பவுசானா இந்த மருந்தினை பெங்களூருல் 15ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிவந்து 40,000 முதல் 60,000 ரூபாய் வரை விற்று வந்ததும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து கறுப்புப் பூஞ்சைக்குப் பயன்படுத்தபடும் 8 மருந்து குப்பிகள் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கள்ளச்சந்தையில் கறுப்புப் பூஞ்சை நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்தினை விற்பனைசெய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.