சென்னை: நீதிபதிகளின் மனைவிகள் பற்றி அவதூறாகப் பேசிய விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆவடியில் கைது செய்தனர்.
சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ். கர்ணன். இவர், ஓய்வுபெற்ற நேரத்தில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசிய வீடியோ யூ-டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன், நீதிபதிகள், அவரது குடும்பத்தினர், நீதிமன்ற ஊழியர்களை அவதூறாகப் பேசியதாக, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் புகார் அளித்தது. அவதூறு வீடியோ தொடர்பாக, ஆன்லைன் வாயிலாக மூன்று புகார்கள் சென்னை காவல்துறையிடம் அளிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, இவ்வீடியோவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், முன்னாள் நீதிபதி கர்ணன் மீது 159 (கலவரத்தைத் துாண்டுதல்), 509 (பெண்களை அவமதித்தல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவதூறு வீடியோ தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.29) ஆஜரான முன்னாள் நீதிபதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், முன்னாள் நீதிபதி மீதான புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக காவல்துறை நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று (டிச.1) முன்னாள் நீதிபதி கர்ணனை நேரில் அழைத்து விசாரணை நடத்தியதாகவும், இனிமேல் இதுபோன்ற வீடியோ வெளியிடமாட்டேன் என, அவர் உறுதியளித்திருந்தார் எனவும், காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிமன்றம், இதுவரை ஏன் அவரை கைது செய்யவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும், இதுகுறித்து டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் டிசம்பர் 7ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, ஆவடியில் தனது அலுவலகத்தில் தங்கிவந்த கர்ணனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.