காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக பணியாற்றியவர். 2009 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான இவர் 2009-12 வரை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உதவி ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.
ஒருமுறை சசிகாந்த் செந்திலை அரசு பணியிட மாற்றம் செய்ய முயற்சித்த போது, அதனை எதிர்த்து மக்களே திரண்டு போராட்டம் நடத்தினர். அந்தளவிற்கு கர்நாடக மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றவர் சசிகாந்த் செந்தில். இதனிடையே கடந்த ஆண்டு தனது ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த், அதன்பின் மத்திய அரசின் செயல்களை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் முன்னிலையில் அவர் காங்கிரசில் இணைந்தார். அப்போது அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவெல்ல பிரசாத் ஆகியோரும் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் புதிய பொலிவோடும், புதிய முகத்தோடும் திகழ்வதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தினேஷ் குண்டு ராவ், கர்நாடகாவில் நான் அமைச்சராக இருந்த போது சசிகாந்துடன் பணியாற்றியதாகவும், மக்கள் மனதை கவர்ந்த அதிகாரியாக அவர் விளங்கியதாகவும் பாராட்டினார். மத்திய அரசின் நாட்டை பிளவுபடுத்தும் மோசமான நடவடிக்கைகளால் வேதனையடைந்து தனது பதவியிலிருந்து விலகிய சசிகாந்த் செந்தில், கருத்தியல் ரீதியாக மிகவும் தெளிவுடன் இருப்பதாகக் கூறினார்.
பின்னர் பேசிய சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ், " கடுமையான மன உளைச்சலிலும், நம் உடன் இருப்பவர்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு எதிராக போராட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பதவி விலகினேன். நாம் வெறுப்பு இல்லாமல் வாழ்ந்தோம், இதே மாதிரியான சமூகத்தை அடுத்த தலைமுறைக்கும் வழங்க வேண்டும் என நினைக்கிறேன்.
வரும் காலத்தில் மக்களோடு மக்களாக இணைந்து காங்கிரஸ் கட்சி பணியாற்ற நான் துணையாக இருப்பேன். பாஜகவின் கொள்கை வெறுப்பை விதைக்கும் கொள்கை. அவர்கள் மக்களுக்கு எதிராக மக்களையே திசை திருப்புகிறார்கள். எந்த பொறுப்பையும் எதிர்பார்த்து கட்சியில் இணையவில்லை. பாஜகவை எதிர்கொள்ள சரியான கட்சி காங்கிரஸ்தான் என நம்புகிறேன் “ என்றார்.
அண்மையில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை ஐபிஎஸ் குறித்த கேள்விக்கு, அண்ணாமலை தனது நண்பர் என்றும், ஆனால் அவரது கொள்கை வேறு தனது கொள்கை வேறு என்றும் பதிலளித்த சசிகாந்த் செந்தில், அரசியலில் இறங்கினாலும் ’பேண்ட் சர்ட்’ தான் அணியப்போவதாக நகைச்சுவையாகக் கூறினார்.
இதையும் படிங்க: பைடனையும் மோடியையும் ஒப்பிட்டு விமர்சித்த ப.சிதம்பரம்