சென்னை: மேற்கு மாம்பலம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸ் மொத்த விற்பனை கடையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் சதிஷ்குமார் தலைமையிலான குழுவினர் திடீரென சோதனை செய்தனர்.
தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் அங்கு அதிரடி சோதனை செய்தனர். அப்போது கடையின் உள்ளே சோதனை செய்ததில் அதிர்ச்சியான விஷயத்தை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கண்டு பிடித்தனர். அங்கே பூமிக்கடியில் சம்ப்பு கட்டி அதில் உணவு சமைக்கும் எண்ணெய் சேமித்து விற்பனை செய்தது கண்டு அதிர்ந்து போயினர்.
அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அந்த கடையில் இருந்து பரிசோதனைக்காக எண்ணெய்யை எடுத்து உள்ளனர். மேலும் தற்காலிகமாக கடையை பூட்டி நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதிஷ்குமார், “அந்த கடையில் கலப்பட எண்ணெய் விற்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சோதனைக்கு சென்றோம். அப்போது ஒரே சம்பில் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் பாமாயிலை கலந்து வைத்து விற்பனை செய்து உள்ளனர். அது முற்றிலும் தவறானது எனக் கூறிய அவர் அங்கிருந்து சூரிய காந்தி எண்ணெய் 1,000 லிட்டர், 3,400 பாம் ஆயில் என மொத்தம் 4,400 கெட்டுப்போன எண்ணெயை பறிமுதல் செய்து உள்ளோம்.
அந்த கடை உரிமையாளர் முறையான லைசென்ஸ் இல்லாமல் கடையை நடத்தி வந்து உள்ளார். சில்லறை விற்பனையாளர்கள் இது போன்று தவறை செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த கடையை தற்காலிகமாக பூட்டி உள்ளோம். எண்ணெய் சம்ப்புகள் சோதனைக்கு சென்று உள்ளது 10 அல்லது 15 நாட்களில் முடிவுகள் வரும். அதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கடையில் விற்கப்படும் அனைத்து பொருட்களிலும் ஐஎஸ்ஐ முத்திரை மற்றும் காலாவதி தேதி இருக்க வேண்டும்.பொதுமக்கள் அந்தக் கடையில் தரமற்ற எண்ணெய் விற்கப்படுவதாக புகார் அளித்ததின் பேரில் தற்போது சோதனை நடைபெற்றுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூபாய் 10 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸப் எண்ணில் புகார் அளிக்கலாம். அந்த புகாரின் மீது இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அசைவ பொருட்களை சமைத்து விற்பனை செய்யும் உணவகங்களில் கலர் சாயம் பூசி விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். அது போல் தயாரிப்பது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: பெண்கள் கோச்சில் ஏற முயன்றவரை தடுத்த ரயில்வே பெண் காவலருக்கு கத்திக்குத்து...