ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். வெளிமாநிலங்களிலிருந்தும் வருவது உண்டு. குறிப்பாக மருத்துவமனை கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலே நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
அதைப்போல தான் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (ஏப்.27) நடந்த பயங்கர தீ விபத்து அங்குள்ள நோயாளிகளை அச்சத்திற்கு ஆளாக்கி உள்ளது. தீ விபத்து நடந்த குடோனின் முதல் தளத்தில் சிக்கி கொண்ட 33 நோயாளிகளை ஏணி மூலமாக தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தீ விபத்தின் போது மிகுந்த பயத்தில் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டனர். மயிலாப்பூரைச் சேர்ந்த ஆதிலட்சுமி தனது மகன் கார்த்திக்கை சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தீ விபத்து நிகழ்ந்த சமயத்தில் ஆதிலட்சுமி ரத்த பரிசோதனை அறிக்கை வாங்க கீழ் தளத்திற்கு வந்துள்ளார்.
தீ விபத்தை கண்டதும் மயங்கி விழுந்து விட்டார். இதைப்போல மற்ற நோயாளிகளும் மிகுந்த பீதிக்குள்ளாகியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தரைதளத்தில் தீப்பிடித்தவுடன் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் கரும்புகை வந்ததால், கல்லீரல் பிரச்சினை தொடர்பாக அங்கு சிகிச்சை பெற்று வந்த 25 பேர் செய்வதறியாது திகைத்து நின்றதாகவும், உடனே மருத்துவர்களே நோயாளிகளை மீட்டு கொண்டு சென்றதாக நோயாளி கீதா தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரிலிருந்து நரம்பியல் பிரச்சனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், நல்லபடியாக மருத்துவர்களே தீவிபத்திலிருந்து மீட்டு கொண்டு வந்ததாக கண்ணீருடன் பெண் நோயாளி தெரிவித்துள்ளார். உயிருடன் பத்திரமாக மீட்ட மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு நன்றி என நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.
110 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த இந்த மருத்துவமனை கட்டடத்தில் முறையாக ஜன்னல் வசதிகள் இல்லை. அதனால் தான் கரும்புகை வெளியே முடிவில்லை. தீயணைப்பு வீரர்கள் சுவர்களை உடைத்து அதனை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக இந்தக் கட்டடத்திற்கு தீயணைப்புத்துறையினரின் தடையில்லா சான்றிதழ் இல்லை என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்று. தீயணைப்புத்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து உயிர் பலி நிகழாமல் தடுத்துள்ளனர்.
இனிமேலாவது தீ பாதுகாப்பு வசதிகளை முறையாக அமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சை தேர் விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ஸ்டாலின்