சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் தண்ணீர் கேன் வியாபாரம் செய்யும் சேதுராஜன் என்பவர் அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு உணவு கொடுக்கச் சென்றபோது அருகிலிருந்த மின்கம்பம் சாய்ந்து அவர் மீது விழுந்ததில் சம்பவம் இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி சங்கரேஸ்வரி காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்த புகார் கடிதத்தில் முக்கியமான ஏழு வரிகளை காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யாமல் மாற்றம் செய்து பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக அவர் எழுதிய புகார் கடிதத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததற்கு மின்சார வாரியத்தின் போதிய பராமரிப்பின்மையே காரணம் என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மாறாக காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் அந்த முக்கியமான வரிகளை பதிவு செய்யாமல் அதற்குப் பதிலாக மின்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தினால் சேதுராஜன் உயிரிழந்தார் எனப் பதிவு செய்யப்பட்டிருந்ததாக அவர் மனைவி கூறியிருந்தார்.
இந்தச் செயல் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மெத்தனப் போக்கை காவல் துறையுடன் சேர்ந்து மறைக்கும் விதமாகவே உள்ளது என்று அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அதனை மாற்றக்கோரி அவர் வலியுறுத்தியுள்ளார்.