சென்னை: மடிப்பாக்கம் 188ஆவது திமுக வட்டச் செயலாளர் செல்வம் (45). இவர் இந்த வார்டில் மாநகராட்சித் தேர்தலில் திமுக சார்பில் 188ஆவது வட்ட வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு திமுக சார்பில் மனு அளித்திருந்தார்.
இவருடைய அலுவலகம் ராஜாஜி நகரில் அமைந்துள்ளது. நேற்று (பிப்ரவரி 1) அவரது அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் அவர் அலுவலகத்தின் அருகில் உள்ள ராமச்சந்திரா தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
பின்னர் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், செல்வம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மடிப்பாக்கம் காவலர்கள் தனியார் மருத்துவமனையிலிருந்து அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மடிப்பாக்கம் பிரதான சாலையில் திமுகவினர் பலர் குவிந்துள்ளனர்.
மேற்கொண்டு பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது சோழிங்கநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகர் ராஜா தற்போது அந்த பகுதிக்கு வந்துள்ளனர்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த வட்டச் செயலாளர் ஒருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் பறக்கும் படை அதிரடி: 5 நாள்களில் ரூ.1.6 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்