தேர்தல் வியூகங்களை வகுப்பது, வகுத்த வியூகங்களை செயல்படுத்துவது, அதனை தேர்தலில் வெற்றியாக மாற்றுவது என இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தவர் பிரஷாந்த் கிஷோர்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி என முக்கிய தலைவர்களுக்கெல்லாம் ஆலோசனைகள் வழங்கியதன் மூலம் நாடறிந்த அரசியல் வல்லுநராக உருவெடுத்த பிரசாந்த் கிஷோர், ஐ-பேக் (I-PAC) என்ற தனியார் நிறுவனத்தை நடத்திவருகிறார்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் இவர் கைகோர்க்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இவரின் ஆலோசனைப்படி ஸ்டாலின் சில முடிவுகளை எடுத்ததாகவும் அறிவாலய வட்டாரத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், ஐ-பேக் நிறுவனத்துடன் திமுக தேர்தல் ஒப்பந்தம் செய்திருப்பதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், பிரகாசமான இளைஞர்கள் நிறைந்த ஐ-பேக் நிறுவனத்துடன் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இணைந்திருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சந்திர பாபு நாயுடு கூறும் குற்றச்சாட்டில் ஆதாரமில்லை - பிரஷாந்த் கிஷோர்