சென்னை: மாநகராட்சி கரோனா தடுப்புப் பணியில் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வார இறுதி நாள்களில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகள் மற்றும் இதரக் கடைகள் ஆகியவற்றில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் தீவிரப் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
50% வாடிக்கையாளர்களுடன் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்
மேலும் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் உணவகங்கள், வணிக நிறுவனங்கள், அங்காடிகள் செயல்படுகின்றனவா என சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
அரசின் கரோனா தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி இருப்பதும் தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் ஆகியவற்றில் அரசின் கரோனா தடுப்பு வழிமுறைகளைத் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.