பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக, சென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கண்டன உரையாற்றிய கே.எஸ்அழகிரி, " பாஜக தலித்துகளை ஒதுக்குகிறது. மோடி ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகள்தான். நாளை நடைபெறவுள்ள பீகார் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெறும். அதேபோல், இங்கு மோசமாக ஆட்சி நடத்தும் அதிமுகவை அப்புறப்படுத்தும் கடமையும் நமக்குள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சியினர் எங்கு பரப்புரை மேற்கொண்டாலும், கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்தே பரப்புரை செய்ய வேண்டும் " எனக் கூறினார்.
அடுத்து பேசிய சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ், " மக்கள் தொகையில் 50% மக்களை நாம் ஒதுக்கி வைத்துள்ளோம். மொழியில், பேச்சில், நடத்தும் விதத்தில் என அனைத்திலும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். ஹத்ராஸில் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட தலித் பெண்ணின் உடலை அடக்கம் செய்யக்கூட அவரது குடும்பத்திடம் தர இல்லை. இது எவ்வளவு பெரிய கொடுமை. பெண்களை வீட்டை விட்டு வெளியே வாருங்கள் என முதலில் கூறியவர் பெரியார். எங்கு பெண்களுக்கு எதிரான தவறுகள் நடந்தாலும் அங்கு முதலில் காங்கிரஸ் இருக்க வேண்டும். தவறு செய்தால் ஆண்களை கண்டிக்க வேண்டும் “ என்றார்.
தொடர்ந்து பேசிய குண்டுராவ், " அரசியலமைப்பு சட்டத்தையே மத்திய பாஜக அரசு மாற்றி வருகிறது. பாஜகவை எதிர்த்து யாராவது பேசினால் அவர்களை இந்து விரோதியாக பொய் பரப்புரை செய்கின்றனர். இந்துக்கள் மட்டுமல்ல எந்த மதத்திற்கும் காங்கிரஸ் எதிரானது அல்ல. ஆனால், மதத்தை வைத்து இந்தியாவை பிளக்க பார்க்கிறது பாஜக.
வேலை வேண்டும் என்றோ, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகவோ யாத்திரை நடத்தாமல், மக்களை குழப்பும் வகையில் பாஜகவினர் வேல் யாத்திரை செல்கின்றனர். என்ன செய்தாலும் தமிழ்நாட்டிற்குள் அவர்கள் நுழைய முடியாது. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமையும். தொடர்ந்து அடுத்தடுத்த மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெரும் " எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மத்திய பாஜக அரசின் தலித் மற்றும் பெண்கள் விரோத செயல்களை கண்டிக்கும் வகையில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் காங்கிரஸ் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: காங்கிரசில் இணைந்தார் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்!