சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இதன்காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழையினால் பல்வேறு பகுதிகளிலும், குடியிருப்புகளிலும், வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிவாரண முகாம்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்து நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு
இந்நிலையில் மீண்டும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் எவ்வாறு நிவாரணப் பணிகள் நடைபெற்றுள்ளது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சி, மகாலட்சுமி நகர் மேம்பாலம் அருகில் நீர்வள ஆதாரத் துறையால் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட வெள்ளத் தடுப்புப்பணிகள் மற்றும் பிடிசி குடியிருப்புப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ஊராட்சி அமுதம் நகர் பகுதியில் வெள்ளத்தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட இரும்புலியூர் டிடிகே நகர்ப் பகுதியில் உள்ள வான்னியன்குளம் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத் தொகுப்புகளை முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர், அப்பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.